உலகத் தமிழ் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சன் பிக்ச்சர்ஸின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கரது இயக்கத்தில் எந்திரன் எனும் ரோபோ வெளியாகி ஒருவாரமாகிறது. சிங்கையிலே முதல் நாளே அதைக் காண எனக்கு வாய்ப்புக் கிடைத்து.
முதல் முறையாக ஒரு தமிழ் படம், சிங்கையிலே பத்து இடங்களுக்கு மேல் திரையிடப்படுவது, படத்தின் எதிர்பார்ப்பையும், ரஜினியின் இரசிகளது முடிவில்லாத உற்சாகத்தையும் கோடிட்டுக்காட்டுகிறது.
‘புதியமனிதா பூமிக்குவா’ எனும் தலைப்புப் பாடலுடன் படம் தொடங்குகையில், நிரம்பி வழிந்த அரங்கத்தின் ஆராவாரத்திலும், உற்சாகத்திலும் என்னால் கலந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
எளிமையான கதை. அதை ஷங்கர் பட த்திற்கு ஒரு குறையாகக் கூட சிலர் கருதலாம். இருந்தும் விஞ்ஞானத்தை தமிழ் சினிமாவோடு கலக்கும் ஒரு நல்ல முயற்சி. இனி வரும் ரஜினி படங்களின் எதிர்பார்ப்பை, வேறு பக்கமாக திசைதிருப்ப முயற்சித்து, வழக்கத்திலிருந்து கவனமாக வேறுபட்டிருக்கிறார் ஷங்கர்.
வழக்கமாக, ஒரு அதிரடியுடனோ, பாடலுனோ திரையில் தோன்றும் ரஜினியை, ஆரவாரமில்லாது, அமைதியான தொடக்கத்துடன் கண்டது புதுமையாய் இருந்த போதிலும் பல ரஜினி இரசிகர்களுக்கு ஏமாற்றமே என்று தான் சொல்லவேண்டும். இருந்த போதிலும் விஞ்ஞானக் கதையை மனதில் கொண்டு, இவற்றை தவிர்த்தது ஷங்கரின் சாமர்த்தியமே.
ச்சிட்டியாகவும், வசிகரனாகவும், ரஜினியை இருவேறு பரிணாமங்களில் அழகாக படைத்திருக்கிறார் ஷங்கர். ரோபோ ரஜினியின் சாகசங்களும், திறமையும், ஆற்றலும் அனைவரையும் கவர்ந்ததென்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனாலும், வசிகரனாக வரும் காட்சிகளிலும் ரஜினி கையாண்டிருக்கும் பாவனைகளும், உடல்மொழியும் அவரை விஞ்ஞானியாகவும் வசிகரிக்கத்தான் செய்கின்றன.
அறிவியல் செய்திகளில், இரசிகர்கள் தொலைந்துவிடாது இருக்க, மறைந்த திரு சுஜாதா அவர்களையும், திரு மதன் கார்க்கி அவர்களையும் வசனம் அமைக்க சேர்த்துக் கொண்டது பாராட்டத்தக்க விஷயம். ரஜினியின் பஞ்ச் வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று எமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் இரு கதாப்பாத்திரங்களுக்கும் அது அவசியமற்றது என்று உணர்ந்து, அவைகளை பயன்படுத்தாதது ஷங்கரது துணிச்சல்.
ஐஸ்வரியா ராய் பச்சன் அழகின் ஓவியமாய் காண்பிக்கபட்டிருக்கிறார். கண்ணசைவிலும், முகபாவனைகளிலும், துள்ளலிலும், துடிப்பிலும், ஆடலிலும், பாடலிலும் இளமையும் அழகும் கொட்டிக்கிடக்கிறது. ரோபோவை மயக்க இவரைத் தவிர வேறு எந்த அழகியாலும் முடியாதுதான். அழகின் மொத்தம் ஐஸ்தான்.
பாடல் காட்சிகளுக்கும், வரிகளுக்கும், இசையமைப்புக்குமே படத்தை பலமுறை பார்க்கலாம்.
பாலைவனத்தையும் அழகான பூவனமாக காணமுடிந்தது, ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் இரத்னவேலுவின் கூட்டனியில். இந்த பட த்திற்கு இசையமைத்து,தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்.
பாடல் வரிகளில், ‘ இரும்பிலே ஒரு இருதயம் முழைக்குதோ’ அற்புதமான அறிவியல் கவிதை. ‘காதல் அணுக்கள்’ அழகான அறிவியல்-காதல், ‘ அரிமா, அரிமா’ ஷங்கரின் படத்திலே வரும் பிரம்மாண்டப் பாடல். ‘கிளிமாஞ்சாரோ’ மிக அழகான பின்னணியைக் காட்சிகளைக் கொண்ட பாடல்.அனைத்துப் பாடல்களும் படம் வெளிவருவதற்கு முன்பே மக்களின் மனதில் வெகு சுலபத்தில் பதிந்திருப்பது, வைரமுத்து, கார்க்கி வைரமுத்து,ஏ.ஆர்.ஆர், ஷங்கரின் வெற்றிக்கூட்டனிக்கு வெளிச்சம்.
பொதுவாக ஒரு பட த்திலே, கதாநாயகனது அசுர சக்திகளை, கிராஃபிக்ஸ் போட்டுக் காண்பிக்கும் போது அது மிகைப்படுத்தப்பட்டதாகவேத் தெரியும். இந்த கதைகளத்தில், ரோபோவின் சாகசங்கள் கிரா ஃபிக்ஸாகவே இருக்கும் போதிலும், அது முழுதும் நியாயப்படுத்தப்பட்ட தன்மைகளாகவே தெரிந்தது. தமிழ் சினிமாவை அடுத்த நிலைகளுக்கு இந்த படம் நிச்சயமாக எடுத்துச் சென்றுதான் இருக்கிறது.இது மேலும் தொடரவேண்டும்.
ச்சிட்டி வெர்ஷன் 2.0வில் ரஜினியின் கலக்கல், அவரது பழைய படங்களை நினைவுக்கு கொண்டுவருகின்றன. ரோபோக்களுக்கு நடுவே யாரந்த ‘கருப்பு ஆடு’ எனும் காட்சி மெச்சத்தக்கது. ஆனாலும் இறுதிக் கட்ட காட்சிகளின் நீளத்தையும், வன்முறையையும் தவிர்த்திருக்கலாம். கையாள முடியாத நிலையையும், அவசரத்தையும் படத்தின் முடிவிலே காணமுடிகிறது.
ரோபோட்டிக்ஸ் எனும் களத்தில், இன்னும் ஆளமான பிரச்சனைகளும் சூழ்நிலைகளும் இருக்கின்றன. ஆனால் கடைநிலை இரசிகனைக் கருதி, ரோபோவுக்கு காதலை மட்டும் உரசிக்காட்டியிருப்பது வெறும் பாலபாடமே. ச்சிட்டி வெர்ஷன் 2.0வைப் போல, பல வெர்ஷகள் தமிழ் சினிமாவில் வரவேண்டும். மொத்தத்தில் எந்திரன் தமிழில் ஒரு நல்ல அறிவியல் தொடக்கம்.டொட்!