அரை நிலவு வானில் மிதக்க, அரை மனதோடுதான் எழுதுகிறேன், வேட்கையிலே எழுதாத பல மாதங்கள், இப்படி ஒரு பதிவை ஏற்றபடுத்துவதற்குத்தானோ? யாருடனோ பேசுவது போல நான் என்னுடன் பேசிக்கொள்ளப் போகிறேன். இது எனக்கு மட்டுமே முழுதாய் புரியக் கூடிய பதிவாக இருக்கட்டும். பிறருக்கெல்லாம் எழுதப் போய் எனக்கு நானே எழுத மறந்துதான் கொண்டிருக்கிறேன், அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் இப்பதிவு அமையட்டும்.
நாம் யாரிடம் சாய்ந்து அழுகலாம் என்றிருக்கையில், பிறர் நம்மிடம் சாய்கின்றதை விதி என்று மணிக்கொடி காலத்து எழுத்தாளர் செப்பலாம்; விதிக்கும் விதியுண்டள்ளவா? அது தன்விதியால் பிறர் விதி பாடுபடுவதை யாரிடம் நொந்து செப்புமோ? மீண்டும் அழுகைக்கு வருலாம். என் வருத்தம் நீக்கவே திக்கிலாத நான் எங்கணம் உன் வருத்தம் தீர்க்க தகுதியாகிறேனோ? உன்னிடம் பேசும் போது இருக்கும் தெளிவு ஏன் நான் என்னிடமே பேசும்போது இருப்பதில்லை?
பைத்தியக்காரத்தனத்திற்கும், சீரிய சிந்தையின் செயல்பாட்டுக்கும் இடையே நூலளவுதான் வித்யாசமாம்.(படித்ததை அன்றே உணர்ந்து நின்று பார்க்கிறேன் நான்). உன் பிரச்சனை இன்னதென்று நீ பேசும் மாட்டிலே புரிந்துகொண்ட நான், என் பிரச்சனையின் திக்குக் கூடத்தெரியாமல் தவிப்பதேன்? நீ என்னிடம் புலம்பியது போல, நான் யாரிடம் புலம்புவேன்? அதுவும் புலம்பலாம் என்று நினைத்தவரிடம், புலம்ப உரிமையில்லாமல், புலம்ப முடியுமா என்று கூட தெரியாமல், மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல்……
அப்பனாகட்டும், மகனாகட்டும், அத்தையோ, மாமாவோ, பாட்டியோ, பேரனோ, நண்பனோ, காதலனோ, எல்லா உறவு முறைகளிலும், ஒருவரைவிட மற்றவருக்குத்தான் அந்த உறவு மிக அதிகமாகத் தேவைப்படும். அப்படி அதிகமாகத் தேவை கொண்டவர்தான், அவ்வுறவில் அதிகம் வேதனையும் கொள்வர். இது இயற்கை அறியாமல் விளைத்த பல சட்டங்களில் ஒன்று. உன் பிரச்சனைக்கும் என் பிரச்சனைக்கும் இதுதான் அணிவேரான அம்சமோ என்னவோ?
உன்னைவிட்டு வேர் ஒருவரிடம் செல்கிறேன். என் நினைவாவது அவருக்குண்டோ? யான் அறியேன். நினைப்பிலாமல் இருக்காது, அது நானாக என் மீது கொண்டு கொள்ளும் சுயபச்சோதாபம். உன் நிலையை விட என் நிலை மோசம் ஆகையால் எனக்குத்தான் உடனடித் தீர்வோ, சிகிச்சையோ, இதையெல்லாம் தாங்கிக் கொண்டேன் என்ற பதக்கமோ தேவை.
யாருக்குத்தான் பிரச்சனையில்லை. அவனவனுக்கு அவன் பாடு! அதுவும் அவன் பாடுதான் பெரும் பாடு! உளவியல் காரணங்களில் இப்படி சமூகம் அமைந்திருப்பது பெரும் விந்தை, காரணம் நாம் சமூகமாக வில்லை, நம்மையும் சமூகத்தையும் பிரித்துவைத்துதான் பார்க்கிறோம். அப்படி இருக்க ஏன் நம்மை ஒரு குழும்மாகக் கருதுவானேன்? விந்தை தான் அல்லவா?விந்தை விதைத்து முளைக்கும் சமூகத்தில் விந்தைகளுக்கு எல்லையில்லை தான்.
எழுதாத குறையை இன்று எதேதோ காரணங்களால் நிவர்திசெய்து கொண்டேன். என்னிடம் நானே புலம்பிக் கொள்வதால், ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கிறேன்…பார்ப்போம் நாளைக் காலை விடிந்தவுடன் தெரிந்துவிடும்.