புத்தாண்டு பிறந்துவிட்ட்து. எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2012யில் பலர் பல எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் ஒரே நாளில் வடித்துக் கொட்டிவிட்டுருப்பர். எனக்கும் கனவுகளும் லட்சியங்களும் இருக்கின்றன, அதை குறிப்பிடுவதல்ல இப்பதிவின் நோக்கம். முதலில் அன்றாடம் எழுதவேண்டும்(யாரும் படிக்கிறார்களோ இல்லையோ). அடுத்து, சுவையான விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும், சில விஷயங்களில் எனது கருத்துக்களை முன்மொழியவும், எல்லாவற்றிற்கும் மேலாக,(இப்பதிவுகளை முழுக்க முழுக்க நானே வாசிப்பதால்) எனக்குள்ளே நடத்திக்கொள்ளும் உறையாடலாக இப்பதிவுகளை உபயோகிக்க யத்தணிக்கிறேன்.
முதலில் வருடத்தின் முதல் நாளை ஆராதிப்பது போல் வருடத்தை பலர் ஆராதிப்பதில்லை, அதனால் தான் கனவுகள் பெரிதாக இருப்பின், அதற்கேற்ப நடக்கும் முயற்சிகளெல்லாம் சிறிதாகவே இருக்கின்றன.
*************************************************************************************************
பொதுப்படையாக பேசுவதை தவிர்த்து, சொந்த விஷயங்களுக்கே வருகிறேன். நிறைய படிக்கவேண்டும் எனும் ஆர்வம் மேலும் இருக்கிறது, அதில் எந்த விதத்திலும் சந்தேகமில்லை. படிக்க வேண்டும் எனும் ஆர்வம் இருவகைப் பட்டது; ஒன்று பொதுவாகப் படித்தல், பொழுது போக்காய் படித்தல், இரண்டு ஒரு நோக்கத்தோடு படித்தல். இரண்டையும் தொடர்ந்து செவ்வனே செய்ய அவா நிறைய இருந்தும் சமூக கட்டமைப்பும், எதிர்பார்ப்பும் என்னை மென்மேலும் இத்திசையில் தொடரவிடா வண்ணம் பின்னுக்கிழுக்கின்றன.
நான் பின்னடையப் போவதில்லை! மருத்துவம் படிக்கும் விதை, ஆளமாக மனதிலே பதிந்து, வேர்விட்டு, மரமாக வளர்ந்துவிட்டது, அது பட்டுபோகாமல் தினமும் நீர்விட்டு, பூத்து, காய்த்து, கனியும் வரை சற்றே பொருத்திருக்க வேண்டும்.(தேவர்மகனின் வசனம் இங்கு நினைவு வருகிறது; தெரியாதவர்களுக்கு : வித நான் போட்டது) தினம் அந்த பராமரிப்பு, தணியா வேட்கையும் சாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
இதற்கு சரியான திட்டமும், அதை திறம்பட நடத்திக் காட்டும் திறமையும் வேண்டும். என்ன ஒரு விஷயம், காலம் பொன் போன்றது, ஆக, இந்த வருட்த்திற்குள் இதைச் சாதித்து விட வேண்டும் என்பது எனது எண்ணம்.
அடுத்ததாக பொழுது போக்கான விஷயமாய் திகழும் எழுத்தும் நானும். எழுத்தும் நானும் நல்ல நண்பர்கள் தான் இருந்தும் இந்த நட்பு மென்மேலும் பெருகவேண்டும் என்பது எனதவா. எழுதவேண்டுமென நினைப்பவன், நிறைய படிக்க வேண்டும். ஓரளவு படித்தாகிவிட்டது என்ற இருமாப்புடன் இன்றிலிருந்து எழுத நினைக்கிறேன்.
*****************************************************************************************************
வெண்பா எழுத வேண்டும் என வெகுநாட்களாக ஆசைப்பட்டதுண்டு. அதற்கு முதல் யாப்புத் தெரியவேண்டும்.
‘எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்புவர் புலவர்’ இல் தான் இருக்கிறேன்.
தொடர்ந்து படிப்பதில் வெண்பா இயற்ற வருகிறதா பார்ப்போம், இப்போது ஒரு உ.த.
அன்னையோ செல்வியோ ஆட்சிக் குவரட்டும்
திண்ணைக் கனவில் திடம்பெறுவோம் – வெண்திரைதான்
தீர்த்து வைக்கும் எல்லா பிரச்சனையும் நல்ல
தியேட்டர்உன் ஊரில் திற.
- சுஜாதா
கணையாழி நவம்பர் 1992
வெண்பா சங்கத்திலிருந்துதான் வருனுமா என்ன?